Sunday 12 November 2017

கோதையின் கீதை - 1

I have always wanted to write in Tamil but, as I never learnt Tamil in school, I never tried to write though I somehow taught myself to read fluently. Below is my maiden effort in Tamil writing.


கோதையின் கீதை

உருக்கிய தங்கத்தையும் , பவழத்தையும் கொண்டு வர்ணம் பூசியத்தைப் போல் வானம் காட்சி அளித்தது. வானம் ஒரு தங்க நிற ஏரிப் போல இருந்தது. மேகங்கள், அந்தத் தங்க ஏரியில் பூத்திருந்த தாமரை புஷ்பங்கள் போலக் காட்சியளித்தன. அந்தச் சாயங்கால வெளையில், அல்லி மலர்களும் , மல்லிகைப் பூக்களும் மலர்ந்து தங்கள் நறுமணத்தினால் குயில்களை தங்கள் கூட்டுக்கு வரப்வேற்பதாக தோன்றியது. வீடுகளில் ஏற்றப்பட்ட விளக்கொளி, அந்த மாலைப் பொழுதை மனோகரமாகவும் , இனிமையாகவும் ஆக்கியது . ஆனால் அந்த மாலைப் பொழுதின் அழகை ராதா ரசிக்கவில்லை. அவள் மனதில் வேதனைக் கொதித்து கொண்டு இருந்தது. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிக் கதிர்கள், அவள் மனதை இன்னும் கொதிக்கச் செய்தது. தன்னையே அறியாமல், அவள் ஜன்னல்களைச் சாத்தி தாழிட்டாள். மெதுவே நடந்து, அவள் வீட்டின் திண்ணை பக்கம் வந்தால். பசு மாடுகள் வீட்டிற்குத் திரும்பி கொண்டு இருந்தன. அந்தக் காட்சியை சற்று நேரம் பார்த்து கொண்டு இருந்த ராதையின் மனதில் ஒரு ஆசை தோன்றியது. மாடுகள் வரும் திசையை நோக்கினாள். அந்த அஞ்சு லட்ச மாடுகளிற்குப் பின் கோபர்கள் வருவார்கள், அவர்களுக்கும் பின், கண்டிப்பாகக் கண்ணன் வர வேண்டும். இன்று ஏன் கண்ணனை காணும் புண்ணிய நாளாக இருக்கக் கூடாது? என்று நினைத்து, மெதுவே, விட்டிற்க்கு வெளியே செல்ல முற்பட்டாள். அவள் தந்தை மாலை பூஜையில் இருந்தார் , தாயாரோ சமையல் அறையில் வேலையாக இருந்தாள். இன்று கண்டிப்பாகக் கண்ணனை கண்டு விடலாம் என்று நினைத்து, குதூகலம் அடைந்தாள்.
கதவை மெதுவே திறந்து, கொலுசு ஒளிக்காமல், மெல்ல நடந்து வாசற் பக்கம் சென்ற ராதை, திடுக்கிட்டு நின்றாள். வாசலில் உள்ள புளிய மரத்தின் பின் ஒரு உருவம் தென் பட்டது. தாயோ , தந்தையோ, ராதையின் மன நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, அவளைப் பிடிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்களோ என்று நினைத்துப் பதறினாள். அந்தச் சமயத்தில், பக்கத்து வீட்டில் விளக்கு ஏற்றப் பட, மரத்தின் பின் ஒளிந்து இருந்த உருவம், திடுக்கிட்டு, ராதையின் வீட்டிற்குப் பக்கமாக நகர, அந்த உருவம் போட்டு கொண்டு இருந்த, மஞ்சள் நிற பாவாடையை ராதை கண்டாள்.

"லலிதா!" என்று மெல்லக் கூப்பிட்டாள்.
ராதையின் குரலை கேட்ட லலிதா, திடுக்கிட்டுத் திரும்பினாள்.

" சத்தமாகப் பேசாதே!" என்று ராதையை எச்சரித்தாள்.

'எனக்கும் கண்ணனை காண வேண்டும்" என்றாள் ராதை. "இன்று என்ன நிற பட்டு ஆடை உடுத்திக் கொண்டு இருக்கிறான் என்று தெரியுமா? "

"மஞ்சள் நிறம் என்று கேள்வி. "

"அய்யோ! இன்னம் எத்தனை நேரம்? சீக்கிரம் கண்ணனை காண வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அவன் காட்டு பூக்களினால் ஆன மாலையைச் சாத்தி கொண்டு, நடந்து வரும் அழகைக் கண்டு மகிழ ஆசையாக இருக்கிறது!"

"ராதா! இந்த வேளையில் வெளியே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்" என்று அழைத்த ராதையின் தாயாரின் குரலைக் கேட்டு, இரண்டு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பினர்.

"லலிதாவிடம் சற்று நேரம் பேசுவதற்காக வெளியே வந்தேன்" என்று சொல்லி , ராதை சமாளிக்க பார்த்தாள்.

ராதையின் தாயார் வாசல் பக்கமாக சென்று கொண்டு இருக்கும் பசுக்களை நோக்கினாள். "பொய் பேசாதே!" என்று ராதையைத் திட்டினாள். "கண்டிப்பாக லலிதாவுடன் பேசுவது உனது நோக்கம் அல்ல. பேசுவதாக இருந்தால், இப்படி விட்டு வாசலில் , மரத்தின் பின் ஒளிந்து கொண்டு பேசுவானே? இப்படி ஒளிந்து கொண்டு, கண்ணனைப் பார்ப்பதை யாராவது கண்டால், என்ன நினைப்பார்கள்? உடனே உள்ளே வா. வந்து விட்டு, வேலையைக் கவனி. எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் ஜன்னல் கதவை சாத்தாதே என்று. கதவுகளைத் திறந்த பின், வீட்டு வேலை செய்து முடி. லலிதா, நீயும் உன் வீட்டிற்குத் திரும்பு, இல்லை என்றால் உன் தாயாரிடம் உன்னைப் பத்தி புகார் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்." என்று எச்சரித்தாள்

ராதையின் மனது மறுபடியும் கொந்தளித்தது. இன்னும் எவ்வளவு காலம் கண்ணனைப் பார்க்காமல் இருப்பது? எப்பொழுது தோழிகளுடன் சேர்ந்து கண்ணனுடன் யமுனை ஆற்றங்கரையில் விளையாட வழி பிறக்கிறதோ, அன்று தான் தன் வாழ்க்கையில் விடியும் நாள் என்று நினைத்து வருந்தினாள்.
மரு நாள் காலை, தாயாருடன் ராதை யமுனை ஆற்றங்கரைக்குத் தண்ணீர் எடுத்து வரச் சென்றாள். அங்கே பெண்கள் கும்பல் கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டு இருபதை கண்டார்கள்.

"இங்கே என்ன கூட்டம்?" என்று ராதையின் தாயார் வினாவினாள்.
"ஒ! நல்ல வேளையாக நீயும் வந்து விட்டாய் ," என்று மகிழ்ந்தாள் வ்ரிந்தா தேவி. "நாங்கள் இங்கே கலந்து நம் தேசத்தின் சீதோஷ்ணநிலையை பற்றிப் பேசி கொண்டு இருக்கிறோம்."

"என் மனது கொதித்து கொண்டு இருப்பதைப் பற்றி யாருக்குக் கவலை? சீதோஷ்ணநிலையை பற்றி இப்போது பேசுவானே", என்று நினைத்தாள் ராதா

"சீதோஷ்ணநிலையை பற்றி என்ன கவலை?"

"நீ கவனிக்க வில்லையா? மழைக்காலம் தள்ளிப் போய் விட்டது. பசும் புல்லை தேடி கோபர்கள் மிகத் தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. இப்படியே மழை பெய்யாமல் இருந்தால், நம் தொழில் என்ன ஆவது?"

"அதற்காக இங்கே கலந்து பேசுவதால் என்ன லாபம்?"

"நேற்று முன் தினம் நம் பஞ்சாயத்தால் எடுத்த முடிவைப் பத்தி பேசிக் கொண்டு இருக்கிறோம். நீ ஏன் வரவில்லை?"

"உறவினரைப் பார்க்க, பக்கத்துக் கிராமத்திற்கு சென்று இருந்தேன். பஞ்சாயத்தில் என்ன நடந்தது?"

"நம் கிராமத்தில் உள்ள எல்லாக் கன்னி பெண்களும் சேர்ந்து, காத்யாயனி நோம்பு ஒரு மாத காலம் இருந்தால், நோம்பு முடிந்த உடன், கண்டிப்பாக மழை பெய்யும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரியோரின் வாக்கின் படி, எல்லாப் பெண்களும் நோம்பு நோற்க வேண்டும் என்று
பஞ்சாயத்தில் முடிவு செய்ய பட்டு இருக்கிறது."

"எத்தனைப் பெண்கள் நோம்பு நோற்க வேண்டும்"

"கிராமத்தில் உள்ள எல்லாக் கன்னி பெண்களும் நோம்பு நோற்க வேண்டும். சுமார் அஞ்சு லட்ச பெண்கள் இருக்கிறார்கள்."

"என்ன? அஞ்சு லட்ச பெண்களை எப்படி கண்காணிக்கிறது? சிறுமிகள், அவர்களின் தோழிகளுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசத்தை எப்படிக் கண்டிப்பது?"

"அதையும் பஞ்சாயத்தில் முடிவு செய்து விட்டார்கள். நம் அஞ்சு லட்ச பெண்களையும், கண்ணன் கண் காணிக்கவேண்டும் என்று உத்தரவு இட்டிருக்கிறார்கள். கண்ணன் சிறு பாலகனாக இருந்தாலும், மிக சாமர்த்தியத்துடன் கன்றுகளையும் , பசுக்களையும் மேய்ப்பதை எல்லோரும் அறிவார்கள். அப்படிப் பட்ட சாமர்த்தியம் உடையக் கண்ணனே நம் கன்னிகைகளை ரக்ஷிப்பான் என்று எல்லோரும் நம்பு கிறார்கள். கண்ணன் இருக்க, நமக்கு என்ன கவலை?"

வ்ரிந்தா தேவியின் வார்த்தையைக் கேட்டு, ராதை ஆனந்த கடலில் மூழ்கினாள். கண்ணனுக்குத்தான் எத்தனைக் கருணை! ராதையும் அவள் தோழிகளும், பிரிவினால் ஏற்பட்ட துயர கடலில் மூழ்கியிருப்பதை கண்டு, அவர்களை ரக்ஷிப்பதற்கு அன்றோ சீதோஷ்ணநிலையை மாற்றி இருக்கிறான்!

வ்ரிந்தா தேவி மேலே பேச முற்பட்டாள். "பஞ்சாயத்தின் முடிவைக் கேட்டு கண்ணன் என்ன சொன்னான் என்று தெரியுமா?"

அவளின் வார்த்தையைக் கேட்டு, சுற்றி நின்று கொண்டு இருந்த அத்தனை பெண் மணிகளும் கொல் என்று சிரித்தனர்.

"சீக்கிரம் சொல்லு , பிறகு சிரிக்கலாம் . கண்ணன் என்ன சொன்னான்? "

" அதைக் கேட்க நீ அங்கு இல்லாமல் போய்விட்டாயே! அவன் என்ன சொன்னான் தெரியுமா?," என்று வினவிய வ்ரிந்தா தேவி மறுபடியும் இடி இடி என்று சிரிக்க தொடங்கினாள்.

அப்பொழுது, யமுனை ஆற்றங்கரை பெண்களின் சிரிப்பு ஒலி எதிரொலித்தது. சிரிப்பு ஒலி காட்டு தீ போன்று அங்கே பரவியது. அந்த சிரிப்பு ஒலி அங்கு இருந்த பறவைகளுக்கு இடையூர் ஏற்படுத்த , கூட்டம் கூட்டமாக பறவைகள் ஆகாயத்தை நோக்கிப் பறக்க தொடங்கின. பறவைகளின் இறக்கையில் இருந்து கிளம்பிய சப்தம், பெண்களின் சிரிப்பொலியுடன் கலந்து அங்கு ஒரு பேராரவாரத்தை உண்டு பண்ணியது.

வ்ரிந்தா தேவி கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்க முயன்றாள். "இரு, "என்று சொல்லிவிட்டு "கண்ணன்,” என்று அராம்பித்தாள் ஆனால் ஆரம்பித்த வார்த்தையை முடிக்கமுடியாமல் மறுபடியும் சிரிக்க தொடங்கினாள். பிறகு ஒரு வழியாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ஐயோ! இப்படி என்னைப் பெண் பிள்ளைகளுடன் பழக சொல்கிறீர்களே! இப்படி பெண்களுடன் பழகினால் , காதும் மூக்கும் அறுந்து விழுந்துவிடும் என்று என் அம்மா சொல்லியிருக்கிறாளே. நான் காது மூக்குடன் அழகாக இருபது ஏன் உங்களுக்குப் பொறுக்கவில்லை?" என்று அழுதான் கண்ணன்," என்று சொல்லி முடித்தாள் வ்ரிந்தா தேவி ."அவன் மழலைப் பேச்சை கேட்க நீ அங்கு இல்லாமல் போய்விட்டாயே!"

"அய்யோ, அப்படி என்றால் கண்ணன் பெண்களைக் கண்காணிக்க மாட்டானா?” என்று பதறினாள் ராதையின் தயார்.

"கவலைப் படாதே. எல்லோரும் சேர்ந்து கண்ணனை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டோம். "

இப்படி கண்ணன் தன் லீலையினால் வ்ரிந்தாவனத்தில் வசித்த கோப கன்னிகைகளுக்கு, தன்னுடன் பழகும் பெரும் பேரை பெரியோர்களின் அனுமதியுடன் கிடைக்கும் படி செய்தான்.

"இன்று சாயங்காலம், மறக்காமல் ராதையை யமுனை கரைக்கு அனுப்பு. எல்லாக் கோப கன்னிகைகளும் இன்று மாலை நோம்பு நோட்பதை பத்தி கலந்து ஆலோசனை செய்ய தீர்மானித்திருக்கிறார்கள். கோதை இவர்களுக்கு நொம்பைப் பற்றிய முக்கியமான தகவல் கொடுப்பாள். "

"என்ன, கோதை இவர்களுக்கு வழி காட்டுவாளா? இதை என் முன்னமே சொல்லவில்லை? கோதை இருத்தால் நமக்கு என்ன கவலை? கோதை இவர்களுக்குத் துணையாக வழிகாட்ட இருந்தால், கண்ணன் வராவிட்டாலும் பரவாயில்லை,” என்றாள் ராதையின் தாயார். "கோதை ஒரு தெய்வீகக் குழந்தை! அவள் நம் பெண்களுக்கு வழி காட்ட முன் வந்திருப்பது நாம் செய்த பாக்கியமே ஆகும்!"

"சரியாகச் சொன்னாய். அவள் என்ன சாதாரண பெண்ணா? துளசி புதரின் அடியில் தோன்றிய ஒரு தெய்வீகக் குழந்தை. தந்தை போல மகள் என்று நல்ல பெயரை பெற்றுக் கொண்டு, இந்த சிறு வயதிலேயே பெருமாளுக்குப் பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் புஷ்ப கைம்கர்யம் நித்யபடி செய்து கொண்டு வருகிறாள். இப்படி பக்தியே உருவெடுத்த ஒரு பெண்ணை நாம் பெற்றது நாம் என்றோ செய்த புண்ணியமே," என்று மகிழ்ந்தாள் மல்லிகை என்ற ஒரு பெண்மணி.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த ராதையின் மனது பர பரபரத்தது . தன் தோழிகளுடன் உடனே இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் துடித்து கொண்டு இருந்தாள்.

"அம்மா, எனக்கு சில நிமிடம் அனுமதி தருவாயா? லலிதாவிடம் இந்தச் செய்தியை சொல்ல வேண்டும்."

"என்ன? சில நிமிடமா? உன்னுடை சில நிமிடம் என்றால் அது நாள் கணக்காகக் கூட ஆகலாம் என்று எனக்குத் தெரியாதா! லலிதாவுக்கு ஏற்கனமே சொல்லியிருப்பார்கள். சாயந்தரம் பார்த்துக்கலாம், இப்போது என்ன அவசரம்? " என்று சொன்ன ராதையின் தாயார், தன் பெண்ணின் முகம் வாடுவதைப் பார்த்து சிரித்தாள் , " அட பயித்தியக்காரப் பெண்ணே! சாயந்தரம் உன் தோழிகளுடன் பேச இருக்க, இப்போது கவலை படுவானே ? "

ராதையின் மனசு யமுனை ஆற்றங்கரையை விட்டு நகர மறுத்தது. அன்று நாழிகை எப்பொழுதை விட மிக மெல்லமாக செல்வதாகத் தோன்றியது. யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு, தன் கனவு லோகத்தில் இருந்து திரும்பினாள் ராதை.

"யார் என்று பார் ," என்று அம்மா சொல்வதற்கு முன், வீட்டுக் கதவை திறந்த ராதை, தன் தோழி லலிதாவை கண்டு மகிழ்ந்தாள்.

"அம்மா, லலிதா வந்து இருக்கிறாள்."

"ஐந்தே நிமிடம்," என்று கெஞ்சினாள் லலிதா.

"சரி, ஐந்து நிமிடத்தில் என்ன பேசி கொள்ள வேண்டுமோ பேசி முடியுங்கள்."
அம்மாவின் அனுமதியைப் பெற்ற ராதை, ஒரு மானைப் போல துள்ளி தோட்டத்திற்குள் லலிதாவை பின் தொடர்ந்து ஓடினாள். தோட்டத்தில் , மல்லிகை பந்தலுக்கு கீழ், தன் தோழி ஷ்யாமா காத்துக் கொண்டு இருபதைக் கண்டு ஆஸ்ச்சரியப் பட்டாள்.

"நாங்கள் இன்று மாலை நடக்க இருக்கும் சத் சங்கத்தைப் பற்றி உனக்குத் தெரிய படுத்துவதற்காக வந்தோம்," என்று ஆராம்பித்தாள் ஷ்யாமா.

"அது தான் எனக்கு முன்னமே தெரியுமே," என்று குறுக்கிட்டாள் ராதை.

"பேச விடு," என்று அதட்டினாள் ஷ்யாமா. "இன்று மாலை , கோதை நம் செயல்திட்டத்தை பற்றிப் பேசுவாள்...."

"அதுவும் எனக்குத் தெரியும்," என்று மறுபடியும் குறுக்கிட்டாள் ராதை.

"நோம்பு நோற்பதைப் பற்றி நமக்குக் கோதை சொல்லுவாள் என்று எல்லோருக்குமே தெரியும்."

"நாங்கள் இங்கே நோம்பைப் பத்தி பேச வரவில்லை. நம் செயல்திட்டம் ரஹஸ்யம்.."

"நோம்பு நோற்பதில் என்ன ரஹஸ்யம் இருக்கமுடியும்?"

"எங்களைப் பேச விட்டால் தெரியும்!" என்று கண்டித்தாள் ஷ்யாமா.

"பெரியோர்களின் செயல்திட்டம் சீதோஷ்ணநிலை சீர் செய்வதற்காக, ஆனால், நம் செயல்திட்டம், கண்ணனையே கணவனாக பெறுவதற்காக. "

"கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் எப்படி முடியும்? இவ்வளவு முக்கியமான சத் சங்கத்தை கண் காணிக்க கண்டிப்பாகப் பெரியோர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மத்தியில், எப்படி கண்ணனை நம் கணவனாக அடைவதைப் பற்றி பேசுவது?"

"அதுவா… கோதை நமக்கு மட்டும் புரியும்படி புதிராகப் பேசுவாள். "

"அர்த்தம் நமக்குப் புரியாவிட்டால்?"

"பெரியோர்கள் இல்லை என்றால், தெளிவாகப் பேசுவாள், பெரியோர்கள் இருந்தால், புதிராகப் பேசுவாள் ஆனால், அவள் என்ன பேசினாலும், நமக்குப் புரியும்படி தான் இருக்கும்."

தோழிகளுடன் பேசி விட்டு வீட்டிற்குத் திரும்பிய ராதையின் மனது பரபரத்தது. தன் மனதைக் கண்ணனிடம் பறி கொடுத்த ராதை, காரியங்களில் கவனம் செலுத்தவில்லை. குழம்பில் வெல்லமும், பாயசத்தில் உப்பும் போடாமல் தாயார் தடுத்து நிறுத்தினாள். ஒரு வழியாக மாலைப் பொழுது வந்தது. தோழிகளைக் காண துள்ளி எழுந்தாள் ராதை.

"நன்றாக இருக்கிறது!" என்று ராதையின் அம்மா கண்டித்தாள். "இத்தனை பேர் மத்தியில் இப்படியா ஆடை உடுத்திக்கொண்டு போவது? முகம் கழுவி, புது நீல நிற பட்டு பாவாடை போட்டு கொண்டு போ. "

ராதை அதி வேகமாக புது ஆடை உடுத்திக்கொள்ளச் சென்றாள். அவள் ஆடை உடுத்திய பின், அம்மா கொடுத்த நகைகளைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். ஒரு காதில் தோடு மாட்டிக் கொண்டு இருக்கும் சமயத்தில், தோழி லலிதா வாசல் கதவை தட்டினாள். தோழி வந்த சந்தோஷத்தில் ராதை ஒரு காதில் மட்டும் தோடு போட்டுக் கொண்டு ஓடினாள்.

Continued On:
http://thoughtsonsanathanadharma.blogspot.ca/2017/12/2.html

Please feel free to download free ebook on History Of Vedic Civilization.
https://wetransfer.com/downloads/f9539083c2c4f9989b170bdf0a8cab9e20171229172906/e635c9

https://www.amazon.com/Thiruppavai-Godas-Ms-Swetha-Sundaram/dp/1540709779/ref=sr_1_1?ie=UTF8&qid=1510520575&sr=8-1&keywords=goda%27s+gita
 

Translate

Blog Archive

Search This Blog